பேராதனை தொடருந்து பாலம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
நாட்டில் ஏற்பட்டுள்ள பேரிடரில் சேதமடைந்த பேராதனை தொடருந்து பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கப்படும் என்று தொடருந்து பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரிய தெரிவித்துள்ளார்.
நேற்று அரசு தகவல் திணைக்களத்தில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

158 ஆண்டுகள் பழைமை -புதிய பாலம்
மகாவலி ஆற்றின் குறுக்கே 300 மீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்ட 158 ஆண்டுகள் பழமையான தொடருந்து பாலமே வெள்ளத்தில் சேதமடைந்துள்ளது. பாலத்தின் அடியில் உள்ள குப்பைகளை அகற்றிய பின்னர், பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் மத்திய பொறியியல் ஆலோசனை பணியகத்துடன் இணைந்து பாலத்தின் நிலை குறித்து இன்னும் அறிவியல் மதிப்பீட்டை மேற்கொள்வோம்.
சுத்தம் செய்யும் பணி முடியும் வரை மதிப்பீட்டைத் தொடங்க முடியாது.
சுத்தம் செய்யும் பணிகள்
கடற்படையின் உதவியுடன் சுத்தம் செய்யும் செயல்முறை முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவியல் மதிப்பீடு இரண்டு வாரங்கள் அல்லது ஒரு மாதத்தில் முடிக்கப்படும்.
பாலத்தின் மையத் தூணை சரிசெய்ய முடியுமா என்று நாம் பார்க்க வேண்டும். அது இப்போது சாய்ந்து பாலத்தின் வலிமையை பலவீனப்படுத்தியுள்ளது.
இருப்பினும், அதன் பழைமை மற்றும் ஆரம்ப அவதானிப்புகளைக் கருத்தில் கொண்டு, பழைய பாலத்திற்குப் பதிலாக ஒரு புதிய பாலம் அமைக்கப்படும் என தெரியவருகிறது.
புதிய பாலம் இரண்டு இணையான தொடருந்து பாதைகளைக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.