வெளிநாட்டு விமான நிலையம் ஒன்றில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்தோார் : வெளியான அதிர்ச்சி தகவல்
பிரேசில்(Brazil) நாட்டின் சாவ் பாலோ சர்வதேச விமான நிலையத்தில் கடந்த பல வாரங்களாக நூற்றுக்கணக்கான ஆசிய புலம்பெயர் மக்கள் சிக்கித் தவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர்கள் மிக மோசமான சூழலில் இருப்பதாகவும், தரையில் படுத்துறங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முறையான விசா
இதன்படி வெளியாகிய தகவலின் அடிப்படையில், பெரும்பாலானோர் இந்தியா, நேபாளம் மற்றும் வியட்நாம் நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
இவர்கள் பிரேசில் நாட்டில் நுழையும் பொருட்டே அங்கு சென்றுள்ளதாகவும், இதனிடையே,39 வயதான கானா நாட்டவர் ஒருவர் 2 வாரங்களுக்கு முன்னர் திடீரென்று உயிரழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், முறையான விசா ஏதுமின்றி குறைந்தது 666 புலம்பெயர் மக்கள் விமான நிலையத்தில் தற்போது பல வாரங்களாக சிக்கியுள்ளதாகவும், இவர்கள் பிரேசில் நாட்டில் நுழைந்த பின்னர், அங்கிருந்து அமெரிக்கா அல்லது கனடா செல்வதே இவர்களின் திட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பகுதி
இதனையடுத்து, பிரேசில் நிர்வாகம் இது போன்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிகளை கடுமையாக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது சிக்கியுள்ள ஆசிய நாட்டவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பகுதியில் சிறைவைக்கப்பட்டுள்ளதால், கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது.
இதனால் அவர்கள் குளியலறையைப் பயன்படுத்துவதும், உணவு மற்றும் குடிநீருக்கும் அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறாக, திங்கட்கிழமை முதல் முறையான பிரேசில் விசா இல்லாத வெளிநாட்டவர்கள், தாங்கள் செல்லவேண்டிய நாடுகளுக்கு நேரிடையாக செல்ல வேண்டும். அல்லது பிரேசிலில் இருந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.