முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு மாத செலவு பல இலட்சங்கள்!
ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு மாதாந்தம் பதின்மூன்று இலட்சத்து இருபத்தொன்பதாயிரத்து முந்நூற்று எண்பத்தேழு ரூபாய் (ரூ. 13,29,387) அரசாங்கத்தினால் செலவிடப்பட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவிற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளும் செலவுகள் குறித்து கடந்த காலத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தது.
இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரியிடம் தகவல் கோரிக்கை ஒன்றை முன்வைத்த FactSeeker அமைப்பு, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய சார்பில் அரசாங்கத்தின் மாதாந்த செலவீனங்கள் எவ்வளவு? என வினவியிருந்தது.
விண்ணப்பத்திற்கான பதில் கடிதமானது, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எஸ்.கே.ஹேனாதிரவின் கையொப்பத்துடன் பெறப்பட்டது.
தகவல்கள் கிடைத்தவுடன் பதில் வழங்கப்படும்
கிடைக்கப்பெற்ற பதில் கடிதத்தின்படி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் டிசம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளர் கொடுப்பனவுகள் என்பவற்றுக்கான செலவுகளாக 9,91,000 ரூபாயும், தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் பிற செலவுகளுக்காக 3,38,387.60 ரூபாயும் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தற்போது பயன்படுத்துகின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு FactSeeker அமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி செயலகம்,
உரிய திணைக்களத்திடம் இது தொடர்பான தகவல்கள் கோரப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் கிடைத்தவுடன் பதில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் ஏனைய தொடர் செலவுகள் அடங்கிய செலவீன அறிக்கை ஒரே செலவீன பட்டியலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதால் ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகள் என்பன தனித்தனியாக வழங்க முடியாது எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.