வலுசக்தி துறைக்கு பாரிய சவால்! கல்விநிலை தொடர்பில் எதிர் தரப்பு விமர்சனம்
மெகா வோல்ட் மற்றும் மெட்ரிக் தொன் என்ற அளவுகளுக்கிடையிலான வித்தியாசம் தெரியாத அமைச்சரால் எவ்வாறு வலுசக்தி துறையைக் கட்டியெழுப்ப முடியும் என்றும் இது ஒரு பாரிய சவால் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பியுள்ளார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த 70 ஆண்டு கால ஆட்சியை விமர்சித்துக் கொண்டும், அவ்வப்போது ஏதாவதொரு பெயர் பட்டியலை வெளியிட்டுக் கொண்டும் அரசாங்கம் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறது.
இவற்றை நிறுத்திவிட்டு நாட்டில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
வலுசக்தி அமைச்சர்
வலுசக்தி அமைச்சரிடம் அவரது துறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க முடியாது போயிற்று.
பெயருக்கு தம்மை பொறியியலாளர்கள் எனக் கூறிக் கொண்டிருப்பவர்களின் செயற்பாடுகள் இவ்வாறு தான் இருக்கும்.
உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவை மெட்ரிக் தொன் எனக் கூறும் நிலையிலேயே இவர்களது கல்வியறிவு காணப்படுகிறது.
மெகா வோல்ட்டுக்கும் மெட்ரிக் தொன்னுக்கும் இடையிலான வேறுபாட்டை அறியாத வலுசக்தி அமைச்சரால் எவ்வாறு நாட்டின் வலுசக்தி துறையைப் பாதுகாக்க முடியும்?
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்
இந்த அரசாங்கம் தொடர்பில் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு பத்து சதவீதம் கூட வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் பாரிய அதிருப்தியிலிருக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இவ்வாறான பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியால் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சியின் கீழ்மட்ட உறுப்பினர்களில் 90 சதவீதமானோர் எம்முடன் இணைந்துள்ளனர். எனவே தலைமைத்துவங்களும் இணைந்தால் எம்மால் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். மறுபுறம் தேசிய மக்கள் சக்தியின் இளைஞர்கள் பலரும் எம்முடன் இணைந்துள்ளனர்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |