சிங்களவரிடம் இருந்து தமிழர்களை பிரிக்கும் செயற்பாடு : கவலையடையும் பிள்ளையான்
மட்டக்களப்பில், சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களைப் பிரிக்கின்ற செயற்பாடுகள் தற்போது நடைபெற்றுவருவதை பார்த்து நாம் கவலையடைகின்றோம் என பிள்ளையான் எனப்படும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
பரம்பரை பரம்பரையாக பாட்டனாருக்கே இயலாததை பேரனார் பெற்றுக் கொடுப்பார் என யாராவது சிந்தித்தால் அது நடைபெறாத காரியம் என்பதை என்னால் அடித்துக் கூறமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் எருவில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சிவபுரம் முதலாம் குறுக்கு வீதி, மற்றும் மூன்றாம் குறுக்கு வீதிகள், கொங்றீட் வீதியாக செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்குத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (03.11.2023) இடம்பெற்றது.
இந்த நிகழ்வின்போது கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
பேச்சுவார்த்தையே தீர்வு
அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களைப் பாதுகாத்து வழிநடத்துவதற்கான பாரிய பொறுப்பொன்று உள்ளது. போர்க்காலங்களில் அகதிகளாக்கப்பட்ட நாங்கள் உயிரிழப்புக்களையும், சொத்திழப்புக்களையும் நேரில் கண்டோம்.
பிரச்சினைகளுக்கான தீர்வை வன்முறைகளால் அடைய முடியாது என்பதே நாம் இதனுாடாக கற்றுக் கொண்ட பாடமாகும்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரச்சினைகள், நாட்டின் அதிகாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட எந்தவொரு பிரச்சினைக்கான தீர்வையும் பேச்சுவார்த்தையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறான ஜனநாயகப் பண்புகளைக் கொண்டு ஒரு சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டிய பொறுப்பும் எமக்குள்ளதோடு, இவ்வாறான நம்பிக்கையிலேயே எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பும் உருவானது.
கடந்த கால பேச்சுவார்த்தை மேசைகளில் அதிகாரப் பகிர்வு, நாடாளுமன்றத்திற்குப் போட்டியிடுபவர்கள் குறித்த தீர்மானங்களை எங்கிருந்தோ வந்த ஓர் கூட்டம் தீர்மானித்ததன் காரணமாகத்தான் நாம் அனைத்திற்கும் முகம் கொடுத்து அழிந்து போயிருக்கின்றோம்.
மீண்டும் இப்போது, பழைய வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவது போல், பட்டிருப்புத் தொகுதியில் சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களைப் பிரிக்கின்ற செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை பார்த்து நாம் கவலையடைகின்றோம்.
எமது ஜனநாயகப் பண்புகளை வடக்குத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும் எங்களது தலைவிதியை தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உள்ளது.
எனவே, எதிர்காலத்திலும், இக்கட்சியினை ஒரு பலமான கட்டமைப்பாக நிலை நிறுத்தி முன்னெடுத்துச் செல்ல தொடர்ந்து பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.
கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் க.தயாநிதியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.