முதலீட்டாளர்கள் இன்றி காய்ந்து கிடக்கும் துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகரில் முதலீட்டு திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 74 காணி துண்டுகளில் எந்த காணியை இதுவரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கொள்வனவு செய்யவில்லை என தெரியவருகிறது.
நிர்மாணிப்பு பணிகள் முடிந்து சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விட மேலும் பல காலம் செல்லலாம்
அதில் 6 காணிகளை உள்நாட்டு முதலீட்டு நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்துள்ள போதிலும் அந்த நிறுவனம் இதுவரை நிர்மாணிப்பு பணிகள் எதனையும் ஆரம்பிக்கவில்லை.
இலங்கையில் காணப்படும் அரசியல் ஸ்திரமின்மை மற்றும் கொழும்பு துறைமுக நகர திட்டத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கொடுக்கப்படும் அரசியல் அழுத்தங்கள் என்பன இதற்கு பிரதான காரணம் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையில், கொழும்பு துறைமுக நகர திட்டத்தின் பணிகள் நிறைவடைந்து, அது சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து வைக்க மேலும் பல காலம் செல்லும் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
இதனிடையே கொழும்பு துறைமுக நகரின் முதலீடுகளை செய்யும் முதலீட்டாளர்கள் சம்பந்தமாக நிதி, பொருளாதர ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கையெழுத்துடன் கடந்த 28 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய துறைமுக நகரில் முதலீடுகளுக்கான விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க வருடாந்தம் 2 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கட்டணமாக அறவிட கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
வருடந்தோறும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முடிவடையும் 12 மாத காலத்திற்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும். முன்வைக்கப்படும் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர் நிபந்தனைகளுக்கு உட்பட்டிருந்தால், அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என்பதுடன் முதலீட்டாளர்கள் இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் எனவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அனுமதிப் பெற்ற முதலீட்டாளர்களுக்கு கொழும்பு துறைமுக நகரிலும் அதற்கு வெளியிலும் வர்த்தகங்களில் ஈடுபட வசதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.