யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட நபர் கைது
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நீண்டகலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய குறித்த சந்தேக நபர் நேற்று(01.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலமாக கசிப்பு உற்பத்தி விற்பனையில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம்(01) பருத்தித்துறை பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் இணைந்து சந்தேக நபரது வீட்டை சுற்றிவளைத்துள்ளதுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சந்தேக நபரது வீட்டிலிருந்து கசிப்பு மற்றும் கோட என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரும், சான்று பொருட்களும் இன்று (02) மன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் - கோண்டாவில்
யாழ்ப்பாணம் - கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்று பொலிஸாரால் நேற்று(01.01.2024)நடாத்தப்பட்ட தேடுதலில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் கேரள கஞ்சா, 100 கிராம் ஹெரோயின், ஆறு போதை மாத்திரைகள், போதை மருந்தேற்ற பயன்படுத்தப்படும் ஊசிகள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவருவதாவது,
நீண்ட காலமாக கோண்டாவில் செபஸ்டியன் வீதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் 50,000 ரூபாய் பணத்துடன் நேற்று(01)யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து சந்தேக நபரின் வீடு கோப்பாய் பொலிஸார் மற்றும் மோப்ப நாய் சகிதம் தீவிர தேடுதலுக்கு உட்படுத்தப்பட்ட போது போதைப்பொருட்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது 24 மற்றும் 21 வயதான இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் கைதானவர்களில் ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் போதைப்பொருள் வியாபாரி எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


