கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டம் இலவச கல்விக்கு ஒரு மரண அடி!சஜித்
முன்மொழியப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டம் இலவச கல்விக்கு ஒரு மரண அடியாகும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வலுப்படுத்தப்படுவதை தாம் முழுமையாக ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் , பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான அடிப்படை கட்டமைப்பிலிருந்து விலகி, தற்போதுள்ள இலவசக் கல்வி அழிந்து போவதையும் உயர்கல்வியின் கட்டமைப்பிற்கு வெளியே நிறுவனங்கள் நிறுவுவதையும் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த செயல்பாட்டினால், உயர் கல்வியின் குணாம்சங்கள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆதிக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, இலவசக் கல்வி கடுமையான நெருக்கடியில் தள்ளப்படும்.
அதே நேரத்தில், அரசாங்கத்தின் இந்தச் செயலினால் பல்கலைக்கழக முறைமையின் அறிவுசார் சுதந்திரம் சுயாதீனத்தன்மை அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.
எனவே இலவசக் கல்வி மற்றும் அதன் மரபுரிமையாளர்களின் சுதந்திரத்திற்காக போராட்டங்கள் மூலம் முன்மொழியப்பட்ட சட்டத்தை தோற்கடிப்பதற்கு தாம் செயற்படவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.