எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதல்
எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் மக்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது கைகலப்பில் முடிவடைந்துள்ளது.
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ள தோனா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திலே இவ்வாறான மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குழப்ப நிலை
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக எரிபொருளுக்கு மிகவும் அதியுச்சமான தட்டுப்பாடு நிலவுகின்றது.
கடந்த நான்கு நாட்களுக்கு பின் நேற்று முன்தினம் (08) மாலை எரிபொருள் வந்துள்ளது.
அடுத்து, அங்கிருந்த மக்களுக்கிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளதோடு கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த குழப்ப நிலை ஏற்பட்டமைக்கு காரணம் வரிசையை மீறியமையே என கூறப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்கு பின்னர் பெட்ரோல் வந்ததனால் அவற்றை பெறுவதற்காக முச்சக்கர வண்டிகளும், மோட்டார் சைக்கிள்களும், மிக நீண்ட வரிசையில் காணப்பட்டுள்ளன.
இதன்போது இடையில் வந்தவர்கள் எரிபொருள் அடிக்க முற்பட்டபோதே இவ்வாறான குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
கடமையிலிருந்த பொலிஸாரும் விமானப்படைவீரர்களும் நிலைமையை கட்டுப்படுத்தி சுமூகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.
போக்குவரத்து தடை
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இதன் காரணமாக சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
பொலிஸார் மற்றும் விமானப்படையினர் தலையீட்டினால் போக்குவரத்து சுமுகமான நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குழப்ப நிலை தீர்ந்த பின் மீண்டும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், கிண்ணியாவில் விநியோகிக்கப்பட்ட 6600 லீற்றர் கொண்ட பெட்ரோலானாது பலருக்கும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.



