மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்ந்து வரும் ஆதிவாசிகளின் வாழ்க்கை வரலாறு தொடர்பான தொகுப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மதுரங்கேணிக்குளம் கிராம அதிகாரி பிரிவிலுள்ள குஞ்சங்கல்குளம் பகுதியில் மாத்திரம் 74 ஆதிவாசிகள் குடும்பம் வாழ்ந்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டக்களப்பு ,வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் குஞ்சங்கல்குளம், மதுரங்கேணிக்குளம், கிரிமிச்சை, கொக்குவில், மாங்கேணி, காயான்கேணி, வட்டவான், ஆலங்குளம், நாசிவந்தீவு, குகனேசபுரம், பனிச்சங்கேணி, கண்டலடி, தட்டுமுனை, பால்சேனை, அம்பந்தாவெளி, திக்கான, கட்டுமுறிவு, ஆண்டான்குளம் ஆகிய பகுதிகளில் ஆதிவாசிகள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வாழும் ஆதிவாசி மக்கள் தங்களுடைய ஜீவனோபாய தொழிலாக விவசாயம், வீட்டுத்தோட்டம், தேன் எடுத்தல், மீன் பிடித்தல், கால்நடை வளர்ப்பு போன்ற தொழிலை செய்து வருகின்றனர்.
இங்குள்ள பிள்ளைகள் தங்களுடைய கல்வியை மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆதிவாசிகள் சங்கத்தின் தலைவரான நல்லதம்பி வேலாயுதம் குஞ்சங்கல்குளம் பகுதியில் வசித்து வருகின்றார். இவரின் கீழ் கிழக்கு மாகாணத்தில் ஆதிவாசிகள் பல்வேறு கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் காலை எழுந்து தங்களுடைய இயற்கை தெய்வமான வேடுவ தெய்வத்தினை வழிபட்டு அதன் பிற்பாடு தங்களது ஜீவனோபாய தொழிலான விவசாயம், தோட்டம் செய்கை, தேன் எடுத்தல், மீன் பிடித்தல் போன்ற தொழிலை செய்து வருகின்றனர்.
அத்தோடு தங்களது உறவுகளுடன் இணைந்து தமது சந்ததிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தமது இனத்தின் மாற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களை வழமையாக மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிற்பாடு தங்கள் பகுதிகளுக்குட்பட்ட வனங்களுக்கு சென்று தேன் எடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக மழை காலம் தவிர்ந்த காலங்களில் தேன் எடுப்பது வழக்கம்.
தேன் எடுப்பதற்காக காடுகளில் செல்லும் போது தான் சென்ற வழி மறக்காமல் இருப்பதற்காக மரங்களில் சிறிய கிளைகளை உடைத்து வழியில் போட்டு செல்வதாகவும், நேர் வழியில் செல்லும் போது இலைகள் நேராக தெரியும் படியும் அதில் இருந்து இடது பக்கம் அல்லது வலது பக்கம் திரும்பும் போது அந்தப் பக்கமாக போட்டு செல்வோம் என்றும், காடுகளிற்குள் நுழையும் போது மிருகங்களிடம் இருந்து எங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு சத்தம் (கூச்சலிட்டு) செல்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
தேன் எடுக்க செல்லும் போது காட்டில் தாகம் ஏற்படும் பட்சத்தில் நீர் கிடைக்காத பகுதியாக இருந்தால் அப்பகுதியில் தண்ணீர் கொடி என்ற ஒரு தாவரம் இருக்கும் அக்கொடியை வெட்டி அதன் மூலம் கிடைக்கும் நீரை பருகுவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தண்ணீர் கொடியில் ஒரு அற்புதம் என்னவென்றால் கொடியாக உள்ள மரத்தில் ஒரு பகுதியை வெட்டினால் நீர் வராது அதில் ஒரு அடி அல்லது இரண்டு அடி மட்டில் ஒரு மரத்துண்டை மரத்தில் இருந்து அகற்றி அதனை தலைகீழாக பிடித்தால் அதில் இருந்து நீர் சொற்றுச் சொற்றாக ஊற்றும் அதிலும் மழை காலத்தில் நீர் குறைவாகவும், கோடை காலத்தில் அதிகமாகவும் கிடைக்கும் என்றும் ஆதிவாசிகளின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்துள்ளார்.
தேன் எடுப்பதற்காக காட்டு வழியில் செல்லும் போது ஏதும் காயங்கள் ஏற்படும் பட்சத்தில் தண்ணீர் கொடியை வெட்டி இரண்டாக பிளந்து நடுவில் உள்ள கசரை வழித்து காயத்தில் வைப்பார்களாம் இதனால் காயம் இலகுவில் குணமடையும் வாய்ப்பு உள்ளதாகவும், எந்தப் பெரிய காயங்கள் என்றாலும் அந்த கசரை வைத்து கட்டி தண்ணீர் ஊற்றி ஈரமாக வைத்துக் கொண்டிருந்தால் காயம் மிக விரைவில் ஆறிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீன் பிடித்து தங்களது உணவுக்காக மீனை நெருப்பில் சுட்டு சோற்றை இலையில் வைத்து சாப்பிடுவதே இவர்களது வழமை. அதுபோன்று சோளனை இடித்து அதில் உணவுகள் செய்வது, தேன் சாப்பிடுவது இவர்களது உணவு முறையாக காணப்படுகின்றது.
ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆதிவாசிகளின் கலாசாரம் மற்றும் உணவுப் பழக்கம், பேச்சு வழக்கம் உட்பட்ட பல காலத்திற்கேற்ப கல்வி முறை உருவாகிய நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு காணப்படுவதை இங்கு அவதானிக்க முடிகின்றது.