கிளை விட்டு காய்க்கும் தென்னை மரம் : முல்லைத்தீவு - ஒட்டுசுட்டானில் அதிசயம் (Photos)
ஒட்டுசுட்டான் மாமடுவில் கிளைவிட்டு காய்க்கும் தென்னை ஒன்று பார்ப்போரை அதிசயிக்க வைக்கின்றது.
பொதுவாக தென்னை மரங்கள் கிளைவிட்டு காய்ப்பதில்லை என்பதால் மக்களிடையே இது ஆச்சரியமான விடயமாக இருப்பதாக மக்களில் பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இரு கிளைகளிலும் அதிகளவான காய்கள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. தனிமரம் காய்ப்பது போல் ஒரு மரத்தில் உள்ள இரு கிளைகளிலும் காய்கள் அதிகமாக இருக்கின்றது.
மரத்தின் அமைவிடம்
ஒரு அடியில் இரு மரங்கள் என்று நகைச்சுவைமிகு கருத்தாடலை அவ்வூரில் வாழ்ந்து வரும் உயர்தர உயிரியல் பிரிவு மாணவன் ஒருவர் பகிர்ந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமடு கிராமத்தில் வெள்ளைப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இருக்கின்றது இந்த கிளைவிட்டு காய்க்கும் தென்னைமரம்.
மாமடு என்றும் பழைய மாமடு என்றும் இரு பகுதிகள் உள்ளன. இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு கிராமமாகும்.
பழைய மாமடுவில் ஒரு பகுதி வவுனியா மாவட்ட நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
புளியங்கும் முல்லைத்தீவு வீதியுடன் பழம்பாசி வீதி இணையும் சந்தியில் உள்ள பிள்ளையார் ஆலயமே வெள்ளைப் பிள்ளையார் ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தில் இருந்து மேற்குப்பக்கமாக ஐம்பது மீற்றர் தொலைவில் தனிநபரொருவரின் காணியில் வளர்ந்துள்ளது. இது இருபத்தைந்தாண்டுகள் வயதுடைய தென்னையாக இருக்கும் என்று அவ்வூர் பெரியவர் ஒருவர் குறிப்பிட்டார்.
அரிதான செயல்
பேரின தென்னை வகையைச் சேர்ந்த இது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக வாழக் கூடியது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நன்றாக காய்க்கும் இரு கிளைகளும் ஆரோக்கியமான கிளைகளாகவே ஆரம்பம் முதல் இருந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுற்றியுள்ள கிராமத்தில் வாழ்ந்து வரும் பலருக்கு இந்த தென்னை பற்றிய தகவல் தெரியவில்லை என்பது அந்த மரத்தினை தேடிச் சென்ற அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.
தேடியறியும் ஆர்வமும் ஆச்சரியங்களை ஆய்வு செய்யும் ஆற்றலும் எல்லோருக்கும் இருப்பதில்லை. அதனால் சிலர் தெரிந்து கொண்ட போதும் அது பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
இளவயதினருக்கு கூட இந்த தென்னையை அறிந்துகொள்ளும் ஆர்வம் இல்லையென்பது கவலைக்குரிய விடயமாகும் என அந்த பெரியவர் என்னுடைய கேட்டல்களின் போது பதிலளித்தார்.
தென்னை போன்ற மரங்கள் கிளைகொள்வது மிகவும் அரிதான செயல்களாக இருக்கின்றது. இருபது அடி உயரத்தில் இரு கிளைகளும் தோன்றியுள்ளது.
தென்னையின் இயல்புகள்
ஒவ்வொரு கிளையும் ஆறடி நீளமுள்ள தண்டினை (மரக்குற்றியை என குறிப்பிட்டு பேசினார்) கொண்டுள்ளமையையும் சுட்டிக்காட்டியதோடு இரு கிளைகளும் நன்றாக காய்க்கின்றது மிக அரிது என்பதால் இது பார்த்து அறிந்து கொள்ள வேண்டிய ஒரு தென்னை மரமாக இருப்பது சிறப்பானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Cocos nucifera என்ற விஞ்ஞானப் பெயரைக் கொண்ட தென்னை தாவரவியல் பாகுபாட்டில் ஒருவித்திலையி தாவரமாக அமைகின்றது. கரோலஸ்லினியஸ் (லின்னா) என்ற தாவரவியலாளரால் அடையாளப்படுத்தப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது.
வித்தினுள் ஒரு சேமிப்பிலையை (வித்தகவிழையம்) மட்டும் கொண்ட தாவரங்கள் ஒருவித்திலையிகள் எனப்படும். இவை கிளையற்றவை. ஆணிவேர்த் தொகுதியை கொண்டிருக்காது.
வளரும் போது உயரத்தில் அதிகரித்த போதும் சுற்றுப் பருமனை அதிகரிக்காது. மாறிழையம் இல்லாதவை.
பூக்கள் முப்பாத்து அல்லிகளை கொண்டவை. தெளிவான புல்லி, அல்லி வட்டங்களை கொண்டிருக்காது. தென்னையில் மகரந்த சேர்க்கையை நிகழ்த்தும் விலங்குகளில் அணில், வௌவால் முதன்மையானவை என உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.
பகிரப்பட்ட நினைவுகள்
நெல், மூங்கில், கோதுமை, பனை, கமுகு, இறுங்கு, சோளம், தென்னை, கரும்பு போன்ற தாவரங்கள் ஒருவித்திலையிகள் தாவர வகுப்பினுள் அமையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கிளைவிட்டு காய்க்கும் தென்னை பற்றிய தேடலின் போது தன் நினைவுகளையும் ஒருவர் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தங்கள் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இருந்தது. அப்போது பொது மக்களின் நுகர்வுக்காக தேங்காயின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.
அரிசியும் தேங்காயும் மீனும் கட்டுப்பாட்டுக்குள் விலை இருந்தது. அதனால் ஒரு நாள் கூலியில் வடிவாக சாப்பிட முடிந்தது.
சீமெந்து இரண்டாயிரம் ரூபாயும் பெற்றோல் எண்ணூறு ரூபாவுக்கும் விற்கும் போது அரிசி முப்பது ரூபாவுக்கும் தேங்காய் இருபது ரூபாவுக்கும் மேல் விலையேறாது பேணியிருந்தார்கள்.
மக்களால் தாங்க முடியாத பொருளாதார தடையை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஏற்படுத்தியிருந்த போதும் அதனை இலகுவாக அவர்கள் எதிர்கொண்டிருந்தனர்.
இராணுவ கட்டுப்பாட்டுக்குள் தேங்காய்களை கொண்டு செல்ல அனுமதித்த புலிகளின் நிர்வாகம் தேங்காயின் கேள்வி அதிகரிக்கும் போது நுகர்வுக்கான தேங்காயின் விலையை கட்டுக்குள் பேணுவதற்காக வெளியே (இராணுவ கட்டுப்பாட்டுக்குள்) கொண்டு செல்லும் தேங்காயின் எண்ணிக்கையை குறைத்து விடுவார்கள் என தன் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |