கனடாவில் தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள்!
கனடா - டொராண்டோவை சேர்ந்த 36 வயதான தமிழர் ஒருவருக்கு எதிராக 93 பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இணைய மூலம் குழந்தைகளிடம் ஆபாச படங்கள் மற்றும் காணொளிகளை பெற்றதாக குறித்த நபர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 10ம் திகதி அவருக்கு எதிராக அப்போது 25 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேலும் 68 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த நபர் தற்போது 93 பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மேலும் பல குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், தகவல் தெரிந்தவர்கள் புலனாய்வாளர்கள் அல்லது குற்றத்தடுப்பு பிரிவினரை அனுகுமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை, குழந்தைகள் மீதான இணைய பாலியல் சுரண்டல் ஒரு உலகளாவிய பிரச்சினையாகும், இது ஒவ்வொரு நாளும் குடும்பங்களை பாதிக்கிறது. இணையம், குற்றவாளிகள் எந்த நேரத்திலும், உலகில் எங்கும் குழந்தைகளை சுரண்டவும், துஷ்பிரயோகம் செய்யவும் அனுமதித்துள்ளது.
இந்நிலையில், குழந்தைகள், பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோருக்கு இணைய பாலியல் சுரண்டலைப் பற்றி அறிய குழந்தைகள் பாதுகாப்புக்கான கனேடிய மையம் மூலம் ஆதாரங்கள் உள்ளன.