பயணச்சீட்டு விற்பனையின்றி தினமும் 90 லட்சம் ரூபாய் நஷ்டம்
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் இன்று முற்பகல் முதல் ஆரம்பித்துள்ள பயணச்சீட்டு விநியோகிப்பதில்லை என்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இலங்கை தொடரூந்து திணைக்களத்திற்கு தினமும் 80 முதல் 90 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும் என தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன (Sumedha Somarathne) தெரிவித்துள்ளார்.
தொடரூந்து திணைக்களத்திற்கு சாதாரணமாக பயணச்சீட்டு விற்பனை மூலம் தினமும் 80 முதல் 90 லட்சம் வரையில் வருமானம் கிடைக்கும். பண்டிகை காலம் என்பதால், தற்போது அதனை விட அதிகளவான வருமானம் கிடைக்கும்.
பல பில்லியன் ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் தொடரூந்து திணைக்களத்திற்கு இவ்விதமாக நஷ்டம் அதிகரித்தால், திணைக்களம் மேலும் கஷ்டத்திற்குள் விழும்.
தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் தீர்வை வழங்காது போனால், கட்டாயம் நாளை மறுதினம் நள்ளிரவு 12 முதல் கட்டாயம் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட போவதாகவும் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
தொடரூந்து நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பயணிகளை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் விருப்பமோ, தேவையோ இல்லை.
பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு போன்ற பொறுப்பதிகாரிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் போலவே, மக்களுக்கு போதுமான அளவில் தொடரூந்துகளை இயக்காமை, ஆபத்தான சமிக்ஞை விளக்கு கட்டமைப்புகளை சீரமைக்காமை போன்ற காரணங்களை முன்வைத்து இந்த தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.