இந்தியா – நேபாளம் இடையே 8 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையில் விண்வெளி தொழில்நுட்பம், பாதுகாப்புப் பயிற்சி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட எட்டு முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்தியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பிரதமர் பலேந்திர ஷா மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, புதுடெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இந்த ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன.
முதலாவது இந்திய அரசுமுறைப் பயணம்
இந்த ஒப்பந்தங்களில்: விண்வெளி மற்றும் செய்மதித் தொடர்பாடல் தொழில்நுட்பம், பொலிஸ் மற்றும் தடயவியல் அறிவியல் ஒத்துழைப்பு, அரச சேவை அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவ முறைகள் தொடர்பாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸ் பயிற்சி, தடயவியல் ஆராய்ச்சி மற்றும் அரச நிர்வாகத் திறன் மேம்பாடு தொடர்பான ஒத்துழைப்புகளும் இந்த ஒப்பந்தங்களில் இடம்பெற்றுள்ளன.
இதற்கு முன்னதாக, புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேபாளப் பிரதமர் பலேந்திர ஷாவுக்கு சம்பிரதாயபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், அவர் மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மலரஞ்சலியும் செலுத்தினார்.
2026 மார்ச் மாதம் பிரதமர் பதவியேற்ற பின்னர் பலேந்திர ஷா மேற்கொள்ளும் முதலாவது இந்திய அரசுமுறைப் பயணம் இதுவாகும்.