கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் 7ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று வியாழக்கிழமை (23) பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் கே.ரி.சுந்தரேசன் தலைமையில் வளாகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது.
"தன்னிறைவு வாய்ந்த சூழல் நீதி சமுதாயம் வழியாக அமைதியாக அடைவோம் - பண்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களை இணைப்போம்" என்ற உயரிய கருப்பொருளின் கீழ் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், கிழக்குமாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தன் பேராசிரியர் டெரன்ஸ் முஜீதின் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், இந்திய மரிட்டன் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையின் கீழ் அனுப்பப்பட்ட ஆய்வறிஞர் ரமேஸ் கனகந்தே அவர்களும் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தார்.
இம்மாநாட்டில் நாடு முழுவதிலும் இருந்து வந்த ஆய்வாளர்கள் சூழல் நீதி, சமூகம், பண்பாட்டு அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்து கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டனர்.
இதன் மூலம் பிராந்திய மற்றும் உலகளாவிய சமூக மேம்பாட்டுக்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இந்த ஆய்வு மாநாடு கல்வித் துறைக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிப்பதாக அமைந்ததுடன், எதிர்கால ஆய்வுகளுக்கு வலுசேர்க்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.



