பாடசாலையொன்றில் 71 மாணவர்கள் கண் பாதிப்பு:அறிக்கை கோரியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் உள்ள தர்மபுரம் இல 1 ஆரம்ப பாடசாலையில் 320 மாணவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டதில் 71 மாணவர்களுக்கு கண் பாதிப்பு என தெரிவிக்கப்பட்ட விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் பலத்த சந்தேகத்தை எழுப்பி செய்தி வெளியிட்டதனை தொடர்ந்து மாவட்ட சுகாதார பிரிவினரும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ள நிலையில், தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகமும் குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளரிடம் அறிக்கை ஒன்றை கோரியுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனராஜ் கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,
தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள பாடசாலை என்ற வகையில் தாங்கள் இப்பரிசோதனைக்கு அனுமதி வழங்கியிருப்பின் எந்த நியமத்தின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது, பெற்றோரின் சம்மதம் பெறப்பட்டமை மற்றும் சுகாதார துறையின் ஆலோசனை பெறப்பட்டமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கையினை இன்று (24) நண்பகலுக்கு முன் அனுப்பி வைக்குமாறும்
கேட்டுள்ளார்.