சிறைப்பிடித்த 63-மாடுகளை விடுவித்த விவசாயிகள்
தோப்பூர் கமநல சேவை திணைக்களத்தின் கீழ் உள்ள பாட்டாளிபுரம் -நாகம்மாள் விவசாய சம்மேளனத்தினால் பிடித்து வைக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களின் 63 மாடுகள் இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் நேற்றையதினம் (13) விடுவிக்கப்பட்டது.
பாட்டாளிபுரம் -நாகம்மாள் விவசாய சம்மேளனப் பிரிவில் செய்கை பண்ணிய வேளாண்மைகளை சேதப்படுத்தியதாக 63 மாடுகள் (11) நள்ளிரவு விவசாய சம்மேளனத்தில் பிடித்து வைக்கப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்தது.
கால்நடைகள் விடுவிப்பு
இந்தநிலையில் தோப்பூர் கமநல சேவை திணைக்களத்தின் போதனாசிரியர் சின்னராசா புவனேஸ்வரன் ,கமநல சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர் உள்ளிட்டோர் நேற்றையதினம் கள விஜயம் மேற்கொண்டு விவசாயிகளிடமும்,கால்நடை பண்ணையாளர்களிடமும் சுமூகமான முறையில் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.

இதன் பின்னர் சேத விபரங்களை அறிந்து கொள்ள வயல் நிலங்களுக்கு கள விஜயமும் மேற்கொண்டு சேத விபரங்களை பதிவு செய்தனர். கால்நடைகளால் விவசாய நிலங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களின் அடிப்படையில் நஷ்டஈடு தீர்மானிக்கப்படும் எனவும் இதனை கால்நடை பண்ணையாளர்கள் வேளாண்மைச் செய்கையாளர்களுக்கு வழங்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு இரு தரப்பினர் ஒத்துக் கொண்டதன் அடிப்படையில் பிரச்சினை சுமூக நிலைக்கு கொண்டு வரப்பட்டது. இதன் பின்னர் குறித்த 63 மாடுகளும் பண்ணையாளர்களிடம் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

