தீபாவளிக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு செல்ல 60 பேருந்துகள் சேவையில்
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக மலையகத்திற்கு வருகை தந்த மக்கள் மீண்டும் தங்களது பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக 60 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹட்டன் இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போவின் முகாமையாளர் பாலித வீரசூரிய தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வருகை தந்தவர்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் உள்ள தங்களது பணியிடங்களுக்குச் செல்வதற்காக இன்று (11.11.2026) ஹட்டன் பேருந்து நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது தொடர்பாக ஹட்டன் டிப்போ முகாமையாளரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துதல்
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தீபாவளிப் பண்டிகைக்காக மலையகத்திற்கு வருகை தந்தவர்கள் மீண்டும் பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அதிகளவிலான பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பயணிகளின் வருகை குறைவடைந்திருந்தது. நேற்று ஓரளவு பயணிகள் வருகை தந்திருந்த போதிலும், இன்று அதிகளவானோர் தங்களது பணியிடங்களுக்குத் திரும்புவதற்காக வருகை தந்துள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு சுமார் 10 நிமிடங்களுக்கு ஒரு பேருந்து வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சிலர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹட்டன் டிப்போவின் வருமானம்
மேலும், கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை தீபாவளப் பருவத்தில் ஹட்டன் டிப்போவின் வருமானம் சுமார் 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, பேருந்து சேவைகள் போதியளவில் காணப்படுகின்ற போதிலும், நீண்ட நேரம் கால்கடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகப் பயணிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
இதற்கிடையில், டிட்வா சூறாவளியின் தாக்கம் காரணமாக மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமையும், பயணிகள் அதிகளவில் பேருந்து சேவைகளை நாடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இதனால், தீபாவளிக்காக சொந்த ஊர் திரும்பிய மலையக மக்களின் மீள் பயணத்தில் இம்முறை பேருந்து சேவைகள் முக்கிய பங்கு வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
