பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு - கொந்தளிப்பில் மக்கள்
மட்டக்களப்பு - நெடியமடு பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்காக தண்ணீர் எடுப்பதற்கு தோண்டப்பட்ட பாதுகாப்பற்ற குழியில் விழுந்து 6 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (04.09.2026) இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நெடியமடு பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய நாகராசா நவதீப் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
பாதுகாப்பற்ற முறையில் காணப்பட்ட குழி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 6ஆம் கட்டை என அழைக்கப்படும் நெடியமடு பாடசாலைக்கு எதிர்ப்புறமாக உன்னிச்சைக் குளத்தில் இருந்து வயலுக்குச் செல்லும் ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கான பணிகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்போது, தண்ணீர் எடுப்பதற்காக வேலிக்கு அருகில் பாரிய குழியொன்று தோண்டப்பட்டிருந்ததுடன், அதனைச் சுற்றி எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணியளவில் குறித்த சிறுவன் வீட்டின் வேலிக்கு அருகில் நடந்து சென்றபோது, அங்கு தோண்டப்பட்டிருந்த குழிக்குள் தவறி விழுந்துள்ளார்.
6 வயது சிறுவன் உயிரிழப்பு
இதனையடுத்து, சிறுவனை மீட்டெடுத்து கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தபோதும், அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததே இந்தத் துயரச் சம்பவத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு மரண விசாரணை அதிகாரி சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்த சிறுவனின் சடலத்தை பார்வையிட்டு நீதவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
மேலும், சடலம் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பாலம் அமைக்கும் பணிகளின்போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததால் சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 19 Evening