வீரநகரை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு
திருகோணமலை - வீரநகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருப்பு பிரதேசத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாப்பதற்கு கல்வேலி நிர்மாணிக்கும் பணி இன்று (3) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர ஆரம்பித்து வைத்தார்.
பொதுமக்களின் குடியிருப்புப் பகுதியை மையமாகக் கொண்டு, இந்த கல்வேலி, 100 மீட்டர் நீளத்திலும் 2 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படவுள்ளது.
மக்களின் தேவை
இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், நீண்ட காலமாக மக்களின் தேவையாக இருந்த இந்தப் பிரதேச மக்களின் குடியிருப்புகளை பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக, ரூபாய் 6.47 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் ஒரு பிரதேசத்தில் நடைபெறுகின்ற போது, பிரதேச மக்களின் பங்குபற்றல் ஜனநாயக முக்கியமானது. அப்போது தான் அபிவிருத்தி திட்டங்களின் வெளிப்படைதன்மை உறுதிப்படுத்தப்படும்.
எனவே, கல்வேலி அமைக்கும் இந்த திட்டத்தை பேச மக்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும். புதிய அரசாங்கத்தின் கீழ், கொந்ததராத்து வேலைகளுக்கு கமிஷன் எடுக்கும் கலாசாரம் ஒழிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் மூலம் மக்களின் வரிப்பணம் நூறு வீதம் அவர்களுக்கே போய் சேரக்கூடிய புதிய கலாசாரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரோசான் அக்மீமன, திருகோணமலை மாவட்ட செயலாளர் ஹேமந்த குமார, மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர், மத குருமார்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |