நுவரெலியாவில் நிர்கதியாக்கப்பட்ட 6 குடும்பங்கள் - அமைச்சர் வழங்கிய வாக்குறுதி
நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை பிரதேசத்திற்குட்பட்ட ஹல்கரனோயா சென்லெனால்ட்ஸ் தோட்டத்தில் வசித்து வந்த ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 40 பேர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தாங்கள் வசித்து வந்த வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிஸ்கல் அதிகாரிகளின் முன்னிலையில் 40 குடும்பங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நிரந்தர மாற்று இருப்பிடம் இல்லாத காரணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிர்கதியான 40 பேரின் நிலை
பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 40 பேர் ஒரே இடத்தில் தங்கியுள்ள நிலையில், இன்று (12.07.2026) பெருந்தோட்டத்துறை பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஸ்ணன் கலைச்செல்வி ஆகியோர் நேரில் சென்று அவர்களை சந்தித்து நிலைமைகளை பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, பாலர் பாடசாலையில் தங்கியுள்ள குடும்பங்களின் தற்போதைய நிலை மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்துக் கொண்டுள்ளார்.
நீண்டகாலமாக வாழ்ந்து வந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகளுடன் செல்வதற்கு வேறு இடமின்றி தவித்து வருவதாகவும், தங்களுக்கு பாதுகாப்பான நிரந்தர குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தருமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை கவனமாகக் கேட்டறிந்த பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், அவர்களின் எதிர்கால வாழ்வாதாரம் மற்றும் நிரந்தர குடியிருப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.


