கிளிநொச்சியில் 6.49 கிலோ கேரள கஞ்சா மீட்பு - சந்தேகநபர் தப்பியோட்டம்
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 6.49 கிலோகிராம் கேரள கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று (22.07.2026) முன்னெடுக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கை சிக்கிய கஞ்சா
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவின் கல்லாறு பகுதியில் சட்டவிரோத போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், தர்மபுரம் பொலிஸார் கல்லாறு கத்தோலிக்க தேவாலயத்திற்கு அருகில் விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தேவாலய வளாகத்திற்கு அண்மையில் கைவிடப்பட்டிருந்த உரப்பை ஒன்றை பொலிஸார் மீட்டனர்.

அதனை சோதனையிட்டபோது, மூன்று பொட்டலங்களாக பொதியிடப்பட்டிருந்த 6.49 கிலோகிராம் கேரள கஞ்சா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவை கைப்பற்றப்பட்டன.
சந்தேக நபர்கள் தப்பியோட்டம்
இதனுடன், சம்பவ இடத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.