இலங்கையில் 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில்! - வருடாந்தம் 86 ஆயிரம் கோடி ரூபா இழப்பு
பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் உள்ளிட்ட 54 அரச நிறுவனங்கள் தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கி வருகின்றன என்று அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த 54 நிறுவனங்களும் வருடாந்தம் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் இயங்குகின்றன என்றும், கடந்த வருடத்தில் இந்த அனைத்து நிறுவனங்களும் 86 ஆயிரம் கோடி ரூபா நட்டத்தில் இயங்கியுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, 420 அரச நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்கள் அரச பராமரிப்பில் உள்ளன என்றும், அரச நிறுவனங்களில் 32 நிறுவனங்கள் மோசடி நிறைந்ததாகக் காணப்படுகின்றன என்றும், அதற்கான தரவுகளைக் 'கோப்' அண்மையில் வெளியிட்டுள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாக முறையே பெற்றோலியக் கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், இலங்கை மின்சார சபை ஆகியன இனங்காணப்பட்டுள்ளன என்றும், அந்த நிறுவனங்கள் கடந்த 3 வருடங்களில் 30 ஆயிரம் கோடி ரூபா நட்டமடைந்துள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 62 ஆயிரத்து 800 கோடி ரூபா நட்டமடைந்துள்ளது என்றும், ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் 24 ஆயிரத்து 800 கோடி ரூபாவும், மின்சார சபை 4 ஆயிரத்து 700 கோடி ரூபாவும் நட்டமடைந்துள்ளன என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கிணங்க நட்டமடையும் 39 அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.