பல மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டியுள்ள கொழும்பு துறைமுகம்
2024 ஆம் ஆண்டில் 23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்ததன் மூலம் கொழும்பு துறைமுகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து செயலாளர் கே.டி.எஸ். ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ருவன்சந்திர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்
2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்புத் துறைமுகம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகள் அந்த முன்னேற்றத்தை அடைவதற்குத் தடையாக அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். கொழும்பு துறைமுகம் 2024 ஆம் ஆண்டில் 23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.
பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த முன்னேற்றத்தை அடைந்தோம்.
விமான சேவைகளின் முன்னேற்றம்
2023ஆம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை 100 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபத்தைப் பதிவுசெய்துள்ளதுடன் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மாத்திரம் 50 மில்லியன் அமெரிக்க டொலர் இலாபம் ஈட்டப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு முனையம் மற்றும் வடக்கு துறைமுகத்தின் அபிவிருத்தியும் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன், திருகோணமலை, காலி, காங்கசன்துறை ஆகிய துறைமுகங்களிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2023 உடன் ஒப்பிடும்போது விமான சேவைகளும் 25% முன்னேறியுள்ளன. இங்கு, பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் செயற்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதுடன், விமான சேவை வருகைகளின் எண்ணிக்கை 2023 இல் 36 இல் இருந்து ஜூலை 2024 க்குள் 46 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |