சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைக்க நடவடிக்கை: அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்ககார தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகளில் காணப்படும் நெருக்கடியைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக கைதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (22.10.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நியாயமான விசாரணை
கடந்த ஜூலை 01 ஆம் திகதி நிலவரப்படி சிறைச்சாலைகளில் 41,993 ஆகக் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை, செப்டம்பர் 30 ஆம் திகதியளவில் 36,925 ஆகக் குறைந்துள்ளதாகத் தரவுகளை வெளிப்படுத்தி அமைச்சர் விளக்கமளித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், வரவிருக்கும் சட்டத் திருத்தங்களின் கீழ் அரசாங்க பகுப்பாய்வாளரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்ட பிறகு இரண்டு மாதங்களுக்குள் அது தொடர்பான அறிக்கையை வழங்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.

வழக்கு முடிவடையும் வரை போதைப்பொருள் பொதியை முழுமையாகத் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, அவற்றின் புகைப்படங்கள் மற்றும் தேவைப்படின் காணொளிகளை எடுத்து நீதவானுக்கு அறிவித்து, நீதிமன்றக் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவற்றை விரைவாக அழிப்பதற்கு நீதவானுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
இந்தச் செயல்பாட்டின் போது குற்றம் சாட்டப்பட்டவர் அல்லது சந்தேகநபரின் அடிப்படை உரிமைகளுக்கோ அல்லது நியாயமான விசாரணைக்கான உரிமைக்கோ எவ்வித பாதகமும் ஏற்படாத வகையில், சட்டப்பூர்வமாக இந்நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குச் சட்டத் திருத்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.