தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல்
தியாகி பொன். சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் யாழ்ப்பாணம்- உரும்பிராயில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவேந்தலானது இன்று (05.06.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுடரேற்றி பொன் சிவகுமாரனது சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அரசியல் வேறுபாடுகள் இன்மை
அரசியல் வேறுபாடுகளின்றி பல்வேறு தரப்புகளாலும் முன்னெடுக்கப்பட்ட அஞ்சலி நிகழ்வில் அரசியல் தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் பொதுமக்கள் என பல்வேறு தரப்புகளும் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை தியாகி சிவகுமாரன் தொடர்பில் அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும் சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் இயக்குனர் ஜோதிலிங்கம் இன்று தனது அலுவலகத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், ஆனி 5ம் திகதி உரும்பிராய் சிவகுமாரனின் 49 வது நினைவு தினம். தனது 24வது வயதில் சிவகுமாரன் மரணமடைந்தான். அவன் உயிரோடு இருந்திருந்தால் தற்போது 73 வயதாகி இருக்கும்.
ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பகர்த்தா அவன் தான். சயனட் அருந்தி முதன்முதலில் மரணமான போராளியும் அவன்தான்.
சிவகுமாரனை நினைவு கூறுவதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் வரலாற்றையும் அதற்கு பங்களித்தவர்களையும் நாம் நினைவு கூருகின்றோம்.
சிவகுமாரன் 1950ம் ஆண்டு ஆவணி மாதம் 26ம் திகதி ஆசிரியர் பொன்னுத்துரைக்கும் அன்னலட்சுமிக்கும் மகனாகப் பிறந்தான்.
ஆரம்பக் கல்வியை உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், தொழில் நிலைக்கல்வியை கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரியிலும் பயின்றான்.
அற நெறி முரண்பாடு
சிவகுமாரன் முதலில் கவனம் செலுத்தியது சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் தான். தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுத்த அக்கால இளைஞர்களிடையே ஜாதி முரண்பாடு தொடர்பாக இரண்டு கருத்துக்கள் இருந்தன.
ஒன்று இது அற நெறிகளுக்கு முரணானது, இரண்டாவது தமிழ்த்தேசிய அரசியலை ஜாதி முரண்பாடு பலவீனப்படுத்தும்.
இவை தவிர இந்த விவகாரத்தை கோட்பாட்டு ரீதியில் விளங்கிக் கொண்டார்கள் எனக் கூற முடியாது.
இடதுசாரிகளின் குறிப்பாக சண்முகதாசன் தலமையிலான சீனச்சார்பு கம்யூனிஸ்கட்சியின் சாதி ஒழிப்புப் போராட்டங்களும் இவர்களைப் பாதித்திருந்தன,
யாழ்.பல்கலைக்கழகம்
தியாகி பொன். சிவகுமாரனது 49 ஆவது நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மதியம் 12 மணியளவில் மாணவர்களால் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொன் சிவகுமாரனது உருவப்படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொன்.சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார்.யாழ்ப்பாணம், உரும்பிராயில் பொலிஸாரின் சுற்றி வளைப்பில் விஷமருந்தி 1974 யூன் 5ம் திகதி உயிழிழந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - எரிமலை
மன்னார்
மன்னாரில் தியாகி பொன் சிவகுமாரனின் 49 ஆவது ஆண்டு நினை வேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ மன்னார் மாவட்ட அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் லுஸ்ரின் மோகன்ராஜ் தலைமையில் இன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது தியாகி பொன் சிவகுமாரனின் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.குமரேஸ், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் டானியல் வசந்த், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
மேலதிக தகவல் - ஆஷிக்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
