இலங்கை வரலாற்றின் மிக மோசமான விமான விபத்து : இன்றுடன் 49 ஆண்டுகள்
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படும் மார்ட்டின் எயார் DC-8 55CF விமான விபத்து நடைபெற்று இன்றுடன் 49 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1974ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி 191 பயணிகளை புனித மக்கா யாத்திரைக்கு ஏற்றிச் சென்ற போது மஸ்கெலியா சப்த கன்னியர் மலைத்தொடரில் மோதி குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான விமானத்தின் உடல் மற்றும் இறக்கைகள் உள்ளிட்ட பாகங்கள் முற்றிலுமாக சிதைந்து 4 சதுர மைல் பரப்பளவிற்கு சிதறி கிடந்துள்ளன.
விமானத்தின் திட்டம்
இந்த விமானத்தில், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தின் விமானியாகப் பணியாற்றிய ஹென்ட்ரிக் லாம்மே தலைமை விமானியாகவும் ராபர்ட் ப்ளோம்ஸ்மா அவரது துணை விமானியாகவும் கடமையாற்றியிருந்தனர்.
விமானம் இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து புறப்பட்டு, இலங்கையின் கொழும்பில் எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட்டு, அதன் இலக்கான சவூதி அரேபியாவை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.
இலங்கை எல்லைக்குள் 130 மைல் தூரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது விமானம் 35,000 அடிகள் கீழ் இறங்கியுள்ளதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை தொடர்பு கொண்ட பின் மேலும் 7,000 அடிகள் கீழ் இறங்கியுள்ளது.
விபத்துக்கான காரணங்கள்
தொடர்ந்து மார்ட்டின் விமானத்தின் அழைப்புக்காக கட்டுநாயக்க விமான நிலையம் காத்திருந்த போதும் விமானத்தால் எந்த வித தொடர்புகளும் மேற்கொள்ளப்படவில்லை.
மாறாக விமானம் அது பயணித்த திசையை இழந்து சப்த கன்னியர் மலையின் மீது மோதி வெடித்து சிதறியிருந்தது.
தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக விமானம் அது பயணிக்க கூடிய பாதுகாப்பான குத்துயரத்தை விட கீழே பயணித்ததால் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அல்லது, லக்சபானவில் இருந்த விளக்குகளை கட்டுநாயக்கவில் தரையிறங்கும் விளக்குகள் என தவறாக நினைத்து விமானத்தை தரையிறக்க முற்பட்ட போதே விமானம் சப்த கன்னியர் மலைத்தொடரில் மோதியிருக்கலாம் என மற்றொரு காரணமும் கூறப்படுகின்றது.
இறுதிச் சடங்குகள்
குறித்த விமானத்தில் பயணித்த 191 பயணிகளில் ஒரு பயணியேனும் உயிர் தப்பவில்லை என்பதோடு அவர்களின் உடல்கள் சப்த கன்னியர் மலையின் அடிவாரத்தில் உள்ளூரில் உரிய இறுதிச் சடங்குகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.
விமானத்தில் விமான பெண்ணாக கடமையாற்றிய ஒரே ஒரு பெண்ணின் உடல் மட்டும் முழுமையாக மீட்கப்பட்டதுடன் அது இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
விமானத்தின் ஒரு சக்கரம் குறித்த பகுதி பொலிஸ் நிலையத்துக்கு முன் நினைவுக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றொரு சக்கரம் நோர்டன் பாலத்துக்கு அருகிலும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |