வவுனியாவில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு!
வவுனியா மாவட்டத்தில் இந்த வருடத்தில் போதைப் பொருள் பாவனையுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்புகளை கொண்ட 469 துஸ்பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நச்சுப் போதைப் பொருள் ஆபத்தைச் சமூகத்திலிருந்து முற்றிலும் ஒழித்து ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கைக் கொண்ட "நாடே ஒன்றாக" தேசிய செயற்பாட்டுத் திட்டத்தின் வவுனியா மாவட்ட முன்னேற்ற மதிப்பாய்வுக் கூட்டம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
பொதுப் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வத்தகல மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கைது
இதன்போது, நச்சுப் போதைப் பொருள் பாவனையையும் பரவுதலையும் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் ஒரு வருடத்திற்குள் நச்சுப் போதைப் பொருளைப் பாவித்தோர் மற்றும் வர்த்தகர்கள் உட்பட 1,818 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 21 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட 749 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை இதன்போது வெளிச்சத்திற்கு வந்தது.
போதைப் பொருட்கள்
இந்த ஆண்டில் மட்டும் ஹெரோயின் 1,315 கிலோகிராம், கஞ்சா 6,816 கிலோகிராம், கொக்கெய்ன் 270 கிலோகிராம், ஐஸ் 1,615 கிலோகிராம் உள்ளிட்ட பெருமளவான போதைப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெருமளவிலான போதைப் பொருட்கள் பேருந்துகள் மற்றும் சொகுசுப் பேருந்துகள் மூலம் தந்திரமாகக் கடத்தப்படும் போக்கு காணப்படுவதாகப் பாதுகாப்புப் படையினர் வலியுறுத்தினர். இதனைக் கட்டுப்படுத்துவதற்காக முப்படைப் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தத் தீர்மானிக்கப்பட்டது.