குமுதினி படுகொலையின் 41 ஆவது நினைவேந்தல்.. நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக முன்னெடுப்பு
குமுதினி படுகொலையின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வானது நேற்றைய தினம்(15.05.2026)முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் காலை 09 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
நினைவுச்சுடர் ஏற்றல்
முதன்மை நினைவுச் சுடரினை 06 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து, தானும் படுகாயம் அடைந்து இன்றும் படுகொலையின் சாட்சியாக இருக்கும் விசுவலிங்கம் அன்னலட்சுமி ஏற்றி வைத்துள்ளார்.
தொடர்ந்து நினைவுச்சுடர்களை நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார், இந்துமத குரு கா.புவனேந்திரசர்மா மற்றும் உறவுகளை பறிகொடுத்த உறவுகள், உணர்வாளர்கள் என பலர் நினைவுச் சுடர்களை ஏற்றிவைத்துள்ளனர்.

நினைவுத் தூபிக்கான மலர் மாலையினை நல்லூர் சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றம் நெடுந்தீவு பங்குத்தந்தை பி.கமல்ராஜ் அடிகளார் ஆகியோரும், குமுதினி நினைவேந்தல் குழு தலைவர் வி.ருத்திரன் மற்றும் வேலணை பிரதேச சபை உறுப்பினர் க.நாவலன் ஆகியோரும் இணைந்து அணிவித்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்டோர் நினைவுத் தூபிக்கான மலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர் .
அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் அவலங்கள் நினைவாக தீவக நினைவேந்தல் குழுவினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டுள்ளது.

இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகள் காலை 8.15 மணிக்கு மாவிலித்துறை வீரபத்திரப்பிள்ளையார் ஆலயம், மாவிலித்துறை சவேரியார் ஆலயம் என்பவற்றில் சம நேரத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.