கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம் : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில்(Jaffna) கிணற்றுக்குள் தவறி விழுந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் ஒருவர் நேற்றையதினம்(05) உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 23ஆம் திகதி சவர்க்காரத்தின் மீது கால் வைத்து வழுக்கியதால், குறித்த சிறுவன் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம் சிறுவன் உயிரிழந்துள்ளார்.
தவறி விழுந்த சிறுவன்
இருபாலை கிழக்கு, இருபாலை பகுதியைச் சேர்ந்த நிரோசன் விமாத் என்ற 4 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23ஆம் திகதி குறித்த சிறுவன் அயல்வீட்டு சிறுவனுடன் விளையாடிவிட்டு வாளியைக்கொண்டு கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து கை கழுவியுள்ளார்.
இதன்போது சவர்க்காரம் கீழே விழுந்த நிலையில் சவர்க்காரத்தின் மீது கால் வைத்ததால் வழுக்கி கிணற்றினுள் விழுந்துள்ளார்.
இதனையடுத்து, சிறுவனை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் சடலம்
சிறுவனது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |