நீண்ட தூர பேருந்துகளில் பயணிப்போருக்கு எச்சரிக்கை
கந்தளாயில் இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை திருடும் பெண் கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய, இன்று காலை 4 பெண்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டையில் இருந்து திருகோணமலை நோக்கி ஓடும் இரவு நேர பேருந்தில் பத்து லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான தங்கப் பொருட்கள் காணாமல் போயுள்ளதாக கந்தளாய் பொலிஸார் முறைப்பாடு செய்துள்ளார்.
தங்க திருட்டு
பேருந்தில் தனக்கு அருகில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் தான் தூங்கிய பின்னர் தனது சூட்கேஸில் இருந்த தங்கத்தை திருடிச் சென்றதாக அந்த பெண் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
கந்தளாய் நகரில் இருந்து பொருட்களை திருடிய பெண்ணுடன் மேலும் மூன்று பெண்கள் இறங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, பொலிஸாரின் நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்து பயணிகள்
கைது செய்யப்பட்ட பெண்கள் 21, 23, 30 மற்றும் 40 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் நீண்ட தூரம் செல்லும் பேருந்துகளின் பயணிகளின் பெறுமதியான பொருட்களை திருடுவதை சில காலமாக தொழிலாக செய்து வருவது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கந்தளாய் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர்.