இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது
கிளிநொச்சி - பூநகரி பகுதியில் இளைஞர் ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் உட்பட 4 பேர் பூநகரி பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பூநகரி, கௌதாரிமுனை கடற்பரப்பில் நேற்று (26)பிற்பகல் சுற்றுலா சென்றிருந்த இளைஞர் ஒருவர் மீது அதே பகுதிக்குப் படகின் மூலம் குருநகர் பகுதியிலிருந்து வந்த குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கத்திக்குத்துத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் இன்று இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்தனர்.
இந்நிலையில் பூநகரி பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பூநகரி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சதுரங்க தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது கத்திக்குத்துத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் ஒரு பெண் உள்ளடங்கலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பூநகரி பொலிஸ் நிலையம் கொண்டு வரப்பட்டு
விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், குறித்த நான்கு சந்தேக நபர்களை
நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



