வியட்நாம் சென்றுள்ள ஜனாதிபதி : நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake), வியட்நாமுக்கு (Vietnam) விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (04) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் (Vijitha Herath) கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பதில் அமைச்சர்கள்
அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ (Anil Jayantha Fernando), நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன (Eranga Weeraratne), டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர (Aruna Jayasekera) பாதுகாப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர (Arun Hemachandra), வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
