வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு 39 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது தொழில் பாதிப்பிற்கு உள்ளான 64,382 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் வழங்குவதற்கு என 39 மில்லியன் ரூபா நிதியினை அரசு ஒதுக்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச செயலகங்களில் தற்போது நிவாரண வேலைகளுக்கான பணிக்குழுவினர் வேகமாகச் செயற்பட்டு வருகின்றனர்.
அதேவேளை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்களில் இதுவரை 52 கோவிட் நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையிலும் மக்களுக்கான நிவாரண பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த காலங்களைவிட தற்போது கோவிட் தொற்று தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ள ஊரடங்கு எதிர்வரும் 30ம் திகதி வரையும் நடைமுறையில் இருக்கும் காலங்களில் மக்களின் அநாவசியமான நடமாட்டங்கள் அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
இதனை மக்கள் உடனடியாக நிறுத்துமாறும் அல்லாத பட்சத்தில் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், இதனைக் கண்காணிப்பதற்காக பொலிஸ், இராணுவத்தினர் கண்காணிப்பு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.