குச்சவெளி பிரதேச சபையின் 38வது மாதாந்த சபை அமர்வு வெற்றிகரமாக நிறைவு
குச்சவெளி பிரதேச சபையின் 38வது மாதாந்த சபை அமர்வு தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று கோவிட்19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த சபை அமர்வின் போது கோவிட் வைரஸ் தாக்கம் காரணமாக புல்மோட்டை,நிலாவெளி மற்றும் புடவைக்கட்டு போன்ற பகுதிகளிலிருந்து மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.
இத்தாக்கத்திலிருந்து எமது மக்களை பாதுகாக்க வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. அத்துடன் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் துரைரெட்ணசிங்கம் மற்றும் புத்தளம் நகரபிதா மர்ஹூம் கே.ஏ.பாயிஸ் ஆகியோரின் இழப்பிற்கு குச்சவெளி பிரதேச சபையினால் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதன்போது சபை அமர்வில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
01. கோவிட்19 தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட அரச ஊழியர் அல்லாத குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்க தனிவட்டார உறுப்பினர்கள் கொண்ட வட்டாரங்களுக்கு தலா ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா வீதமும் மற்றும் இரட்டை வட்டார உறுப்பினர்கள் கொண்ட வட்டாரங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வீதமும் சபை நிதியிலிருந்து வழங்க தீர்மானிக்கப்பட்டது.
02. பிரதேச மட்டத்தில் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தை முறைப்படி பேணும் பொருட்டு தரம் பிரித்து திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான விசேட செயற்திட்டமாக சுமார் ஒரு லட்சம் கழிவு பொலித்தீன் பைகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
03. ஒவ்வொரு வட்டாரத்துக்கும் சுமார் 500 திண்மக் கழிவுத் தொட்டிகளை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
04. நிலாவெளி பகுதியில் பிரதேச சபைக்கு சொந்தமான காணியில் Speciality Centre அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
05- பிரதேச சபை மற்றும் மத்திய அரசாங்கத்தால் மிக விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள வீதிகளுக்கு வீதி அபிவிருத்தி பணிகளின் போது சம்மந்தப்பட்ட வீதியின் இருபக்கமும் உள்ள குடியிருப்பாளர்கள் தங்களின் வேலிகள் மற்றும் சுற்று மதில்களை அகற்றி வீதி அபிவிருத்தி வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
