உலகில் 38.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிப்பு (video)
உலகில் 38.4 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1.5 மில்லியன் மக்கள் புதிய நோயாளர்கள் என வவுனியா பொது வைத்தியசாலையின் பாலியல் நோய் சிகிச்சை பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பா.அருள்மொழி தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் நேற்று (01.11.2022) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ’’எய்ட்ஸ் காரணமாக 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இலங்கையை பொறுத்தவரை இதுவரை கணக்கெடுப்பின் பிரகாரம் 3600 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 85 வீதமானவர்களே சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டு 411 பேர் எயிட்ஸ் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு சிகிச்சை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 30 எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 17ஆண்களும் 13 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு இலங்கையின் தரவு அடிப்படையில் 15 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட இளம் வயதினர் எயிட்ஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது 14 வீதமாக அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. இவர்களில் இளம் ஆண்களே கூடுதலாக உள்ளனர்.
சிகிச்சைகள்
இந்நிலையில் ஆண் ஆணுடன் உறவு கொள்ளலும் போதைவஸ்து பாவனையும் காரணம் என இனங்காணப்பட்டுள்ளது.
எயிட்ஸ் நோய் அடையாளம் காணப்பட்டு உரிய சிகிச்சையை பெற்றால் சாதாரண மக்கள் போல் வாழ்நாள் முழுவதும் சுகதேகியாக வாழலாம்.
இலங்கையில் ஆணுக்கும் ஆணுக்குமிடையிலான உறவுள்ளவர்களுக்கு அதிகளவில் இந்த நோய் அதிகரித்து வருவதுடன் அடுத்து திருநங்கைகளுக்கும் 1.4 வீதம் என்ற அடிப்படையில் இந்த நோய் அதிகமாக பரவி வருகின்றது’’ என தெரிவித்துள்ளார்.



