சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் 3600 டொலர் கொள்ளை
காலி, பூசா பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்களின் 3 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்கள்(13 லட்சத்து 35 ஆயிரம் ரூபா) மற்றும் மேலும் சில பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கொள்ளையிட்டவற்றில் ஒரு பகுதியை தாம் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மது போதையில் உறங்கிய சுற்றுலாப் பயணிகள்
சுற்றுலாப் பயணிகளாக இந்த வெளிநாட்டவர்கள் ஹிக்கடுவை பிரதேசத்தில் நடந்த விருந்து ஒன்று சென்றுவிட்டு இரவு திரும்பி வந்து, அறை கதவுகளை திறந்து வைத்து உறங்கியுள்ளனர். சுற்றுலாப் பயணிகள் மது அருந்தி இருந்த காரணத்தில் நன்றாக உறங்கியுள்ளனர்.
இவர்கள் உறங்கிய பின்னர், மூன்று சந்தேக நபர்கள் அறைகளுக்கு சென்று 7 சுற்றுலாப் பயணிகளின் பயணப் பொதிகளில் இருந்த 3 ஆயிரத்து 600 அமெரிக்க டொலர்கள், ஒரு லட்சம் ரூபா பெறுமதியான அலைபேசி, இரண்டு வெள்ளி சங்கிலிகள், இரண்டு வெள்ளி மோதிரங்கள் மற்றும் 27 ஆயிரம் இலங்கை ரூபா என்பவற்றை கொள்ளையிட்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையிட்ட பணத்தில் பெரும் பகுதியை ஹெரோயினுக்காக செலவு செய்த சந்தேக நபர்கள்
போதைப் பொருளுக்கு அடிமையான சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட டொலர்கள் இலங்கை ரூபாவாக மாற்றி, பணத்தின் பெரும் பகுதியை ஹெரோயின் பயன்படுத்த செலவிட்டுள்ளனர் எனவும் காலி பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.