மட்டக்களப்பில் இதுவரையில் 353 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவு
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 353 தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இன்று (5) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பணி
இதற்காக 6000 க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள் தேர்தல் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முப்படையினரும் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மாவட்டத்தில் 12 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை இடம் பெற உள்ளது.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 55 520 வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 477 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
நாளை காலை ஏழு மணி தொடக்கம் மாலை 4 மணி வரை வாக்களிக்க முடியும்.அதன் பின்பு மாவட்டத்தின் வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.இதற்காக மாவட்டத்தில் 144 நிலையங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
