மட்டக்களப்பு மாவட்டத்தில் 3200 மலசலகூடங்களை அமைக்க இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் நடவடிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தில் மலசலகூட வசதியற்ற வறிய மக்களுக்கு 360 மில்லியன் ரூபா செலவில் 3200 மலசலகூடங்களை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கையினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டுக் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சினால் மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், இராஜாங்க அமைச்சின் செயலாளர் எஸ்.சேனநாயனக, மேலதிக செயலாளர் கலாநிதி, எஸ்.அமலநாதன், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே.ஜெகதீஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி உட்பட பிரதேச செயலாளர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பிரதிநிதி என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து வெளியிடுகையில்,
இவ்வாண்டு 25 மில்லியன் செலவில் ஆடுகளை வழங்கும் வேலைத்திட்டத்தினை குறுகிய காலத்தினுள் நடைமுறைப்படுத்திய அரச அதிகாரிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்ததுடன், மேலும் இம்மாவட்டத்தில் 17723 மாலசலகூடத் தேவை காணப்படுகின்றது.
இவற்றில் எதிர்வரும் ஆண்டு 3200 மலசல கூடங்களை 360 மில்லியன் செலவில் அமைத்து கொடுக்க அனுமதியும் சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவு பெற்றுள்ளது.
இத்திட்டத்தினை எதிர்வரும் 9 மாதங்களில் நினைவுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இவற்றுக்கான பயனாளிகளின் விபரங்களை எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மாவட்ட செயலாளரூடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி எஸ். அமலநாதன் பிரதேச செயலாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் இத்திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்தினால் 300 மில்லியன் ரூபாவும், இலங்கை அரசினால் 60 மில்லியன் ரூபாவுமாக 360 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர இவ்வமைச்சினால் இஞ்சி உழுந்து, பழவகை உற்பத்திக்கான உதவிகள், தொடர் மாடி வீட்டுத்திட்டங்கள், கோழி வளர்ப்பிற்கான நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டங்கள் போன்றவற்றை எதிர்வரும் ஆண்டில் அமல்படுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.





