இலங்கையில் காணாமலாக்கப்பட்ட அமெரிக்க அருட்தந்தை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண தொழிநுட்ப கல்லூரியின் பணிப்பாளர் அருட்பணி த.ஜீவராஜ் அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வானது இன்று மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு மாகாண தொழிநுட்ப கல்லூரியில் நினைவு கூறப்பட்டுள்ளது.
கடந்த 1990ஆம் ஆண்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளார் 1923ஆம் ஆண்டு அமெரிக்காவில் லூசியா மாகாணத்தில் பிறந்து இயேசு சபை துறவியான இவர் 1941ஆம் ஆண்டு தனது 17வது வயதில் இயேசு சபை துறவியாகத் தன்னை இணைந்து கொண்டதுடன், இயேசு சபை ஆரம்ப குருத்துவ பயிற்சியை பெற்றதன் பின் தன்னார்வ மறைப் பணியாளராக பணியாற்றுவதற்காக முன்வந்ததுடன், இவர் 1948ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.
மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் இயேசு சபை கல்லூரிகளில் பணியாற்றிய இவர் அதன் பின்பு 3 வருடங்கள் இந்தியாவில் உள்ள பூனா நகரத்தில் இறையியலை பயின்று, இவர் பின்னர் குருவாகத் திரு நிலைப்படுத்தப்பட்டு மீண்டும் இலங்கைக்கு வருகை தந்து 1971ஆம் ஆண்டு மட்டக்களப்பிலுள்ள கிழக்கிலங்கை தொழிநுட்ப கல்லூரியில் இயேசு சபைத் துறவி அருட்பணி லோயிட் லோறியோ அடிகளாருடன் சக ஊழியராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் அதன் பிற்பாடு தொடர்ந்து பல்வேறு வகையான சேவைகளை மக்கள் மத்தியில் ஆற்றிவந்த இவர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்துடன் பணியாற்றியிருந்தார்.
உரிமை மறுக்கப்பட்டு அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக இருந்து செயற்பட்டுள்ளார்.
குறிப்பாக கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு படுகொலைகளைச் சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கான அர்ப்பணிப்பு மிக்க சேவையாற்றியதுடன் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் போராடியுள்ளார்.
அத்துடன் தமிழர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பிலும் குரல் எழுப்பிவந்ததுடன் அது தொடர்பான சிவில் சமூக செயற்பாட்டாளராகவும் அருட்பணி லோயிட் லோறியோ இருந்து வந்துள்ளார்.
1985 - 1990 வரை கிழக்கு மாகாண தொழிநுட்ப கல்லூரியின் இயக்குநராக பணியாற்றிய இவர் 1990ஆம் ஆண்டு வாழைச்சேனைக்கு சென்று திரும்பும் வழியில் ஏறாவூர் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்.
இன்று இடம்பெற்ற அருட்பணி யூஜின் ஜோன் ஹேவட் அடிகளாரின் 31வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் இயேசு சபைத் துறவிகளும், கல்லூரியின் பணியாளர்கள், பழைய மாணவர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டு அடிகளாரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததுடன், ஈகைச் சுடர் ஏற்றி மௌன அஞ்சலியும் செலுத்தியிருந்தனர்.




நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




