மட்டக்களப்பில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தேவையான பாரியளவு நட்ட ஈட்டுத்தொகை
மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கான நட்ட ஈடாக 3000 மில்லியன் ரூபா தேவையென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (24) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, விசேடமாக தற்போது விவசாயிகள் மத்தியில் பேசு பெருளாக இருக்கின்ற எலிக்காய்ச்சல் தொடர்பாக பிராந்திய சுகாதார பணிமனையின் தொற்றுநோய் வைத்திய அதிகாரி ஏ.கார்த்திகாவினால் விவசாயிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன், குரங்கு மற்றும் யானை தாக்கத்தினால் தாம் அதிகம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கருத்து தெரிவித்தனர்.
முக்கிய விடயங்கள்
அத்தோடு, தொடர்ச்சியாக மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நட்ட ஈட்டுக் கொடுப்பனவு, விவசாயிகளுக்கான இலவச பசளைக்கான கொடுப்பனவு, மாவட்டத்தில் உள்ள குளங்களை புனரமைப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், பல தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சனி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர்கள், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், விவசாய (விரிவாக்கம்) திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையின் அதிகாரிகள், மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் அதிகாரிகள், தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர், மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகள் பண்ணையாளர்கள் என துறைசார் அதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |