சிறுவர் இல்லங்களிலுள்ள 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை
இலங்கையிலுள்ள அரச மற்றும் தனியார் நன்னடத்தை இல்லங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 16 வயதுக்குட்பட்ட சுமார் 3,000 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்ட இச்சிறுவர்களுக்கு, முறையான அடையாள ஆவணங்கள் இல்லாததால் அவர்களைப் பாடசாலைகளில் இணைப்பதிலும் எதிர்கால வேலைவாய்ப்புகளைப் பெறுவதிலும் பாரிய சிக்கல்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக, வீதிகளில் கைவிடப்பட்ட மற்றும் பெற்றோரின் விபரங்கள் அறியப்படாத சிறுவர்களே இத்தகைய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
பிறப்புச் சான்றிதழ்
இந்த இக்கட்டான நிலையைத் தீர்ப்பதற்காக, பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் ஊடாகச் சிறுவர்களின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு ‘உத்தேச வயது’ நிர்ணயிக்கப்பட்டு, அவர்களுக்குப் புதிய பிறப்புச் சான்றிதழ்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதில் பெற்றோரின் விபரங்கள் கிடைக்காத பட்சத்தில், அந்தந்த மாகாண நன்னடத்தை ஆணையாளரின் பெயரைப் பாதுகாவலராகப் பயன்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது நன்னடத்தை இல்லங்களில் தங்கியுள்ள 9,191 பேரில், முதற்கட்டமாக 3,000 சிறுவர்களுக்கு இந்தச் சான்றிதழ்களை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.