நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இலட்சக்கணக்கானோர் கைது!
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேசிய போதை ஒழிப்புச் செயற்திட்டத்தின் கீழ் இதுவரை 2 இலட்சத்து 99 ஆயிரத்து 775 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பிரிவு அது தொடர்பான புள்ளிவிபரங்களுடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் போதைப் பொருள் விநியோக சங்கிலியை உடைத்தல், போதைப் பொருள் வர்த்தகத்தை முடக்குதல், போதைப் பொருட்களுக்கு எதிராக பொதுமக்களை வலுப்படுத்தல் ஆகியவற்றை நோக்காகக் கொண்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கைது
கடந்த 2025 ஒக்டோபர் 25ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டத்தின் கீழ் இதுவரை இரண்டு லட்சத்தி 99 ஆயிரத்து 775 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதிக்குள் மூன்று லட்சத்தி 569 தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் மூலம் இரண்டாயிரத்து 483 கிலோ கிராம் ஹெரோயின், மூவாயிரத்து 299 கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 269 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கேய்ன்,11 ஆயிரத்து 139 கிலோகிராம் அளவிலான கஞ்சா, ஆயிரத்து 723 கிலோகிராம் அளவிலான குஷ் போதைப் பொருள், 416 கிலோகிராம் அளவிலான ஹஷீஷ் போதைப் பொருள், என்பனவும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு
அதற்கு மேலதிகமாக 45 லட்சத்தி 24 ஆயிரத்து 927 போதைமாத்திரைகள், ஆயிரத்து 276 கிலோ கிராம் அ ளவிலான லேகியம் , 515 கிலோகிராம் அளவிலான மாவா போதைப் பொருள் என்பனவும் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

அதேபோன்று போதைக்கு அடிமையான இரண்டாயிரத்து 577 பேர் இதுவரை புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கின்றது.