கிண்ணியாவில் மேய்ச்சல் தரைக்கான தகராறில் 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்கு
கிண்ணியா பிரதேசத்தில் நிலவும் கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையேயான நீண்டகால நில மீட்புப் போராட்டத்தின் உச்சகட்டமாக, இன்று (ஒக்டோபர் 21) காலை 30 மாடுகள் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ள அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா - குரங்குபாஞ்சான், இரட்டைக்குளம் பகுதியில் வைத்து இன்று காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட கால்நடை வளர்ப்பாளர்கள் இது குறித்து கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பாதிப்புகளின் விவரங்கள்
30 மாடுகள் வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளன.
12 மாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் நான்கு மாடுகளைக் காணவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாள் வெட்டுக்கு இலக்கான மாடுகள், கால்நடைகள் பராமரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிண்ணியா போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்டகால நிலப் போராட்டம்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, கிண்ணியா பிரதேச கால்நடை விவசாயிகளுக்கும் வேளாண்மை விவசாயிகளுக்கும் இடையிலான நில மீட்புப் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில், 2876 ஹெக்டேயர் நிலம் மேய்ச்சல் தரைக்கு உரியது என மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பானது, கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரையின்றிப் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வந்த கிண்ணியா கால்நடை விவசாயிகளுக்கு வாழ்வில் விடிவை ஏற்படுத்தியிருப்பதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
எனினும், இத்தீர்ப்பைத் தொடர்ந்து, கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி கமநல சேவை நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள், தங்களுக்குரிய விவசாய நிலங்களில் பயிர் செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கித் தொடர்ந்து விவசாயம் செய்ய அனுமதிக்குமாறு கோரி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்க, நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட குறித்த பகுதிக்குள் விவசாயிகளை வேளாண்மை செய்ய அனுமதிக்க வேண்டாம் என கமநல சேவை திணைக்களங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலாளரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து கால்நடை வளர்ப்பாளர்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணியிலும் பதற்ற நிலை நீடிப்பதை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.











