கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதையுண்ட மூவர்.. இரவோடு இரவாக தோண்டி எடுத்த அவலம்
காலி - அஹங்கம பொலிஸ் பிரிவின் பெலஸ்ஸ பகுதியில் கட்டுமான பணிபுரிந்த மூன்று பேர், மண்மேடு இடிந்து விழுந்ததில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம், நேற்று (22) இரவு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் வடிகால் தயார் செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு விபத்தில் சிக்கியுள்ளது.
தனியார் நிலத்தில் பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மண்மேட்டிலிருந்து வடிகால் வெட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, மண்மேடு திடீரென இடிந்து விழுந்த நிலையில் மூவர் அதற்குள் புதையுண்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அதனை தொடர்ந்து, மண்ணிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட மூன்று தொழிலாளர்களை கொன்னகஹேன மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்ற போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விபத்தில் இறந்த மூன்று பேர் மாத்தறை, மெதிரிகிரிய மற்றும் பதியதலாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
பெலஸ்ஸ யடிகஹா வனப்பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், உடல்கள் அஹங்கம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் குறித்து அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.





