முல்லைத்தீவு- மாத்தளன் கடலில் மூன்று கடற்றொழிலாளர்கள் மாயம்! விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
முல்லைத்தீவு- மாத்தளன் கடலில் தொழிலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துமாறு கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் பாக்கியநாதன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
27, 28 மற்றும் 54 வயதுடைய மூவர் இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இவர்களில் இருவர் மாத்தளனைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் மன்னாரில் இருந்து கடற்றொழிலுக்காக மாத்தளனுக்கு வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் நேற்றையதினம் (26.10.2026) காலை 7.30 மணியளவில் மாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்காக சென்ற நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை.
தேடுதல் நடவடிக்கை
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர், கடற்றொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்களும் இதுவரை கரை திரும்பவில்லை.

இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய திணைக்களத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளோம்.அவர்கள் கடற்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக எமக்குத் தெரிவித்துள்ளனர்.
எனினும், கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும். அவ்வாறு முடியாத பட்சத்தில் விமானப்படையின் உதவியியுடனாவது தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.
உரிய நடவடிக்கை
காணாமல் போன கடற்றொழிலாளர்களின் உறவினர்கள் கடற்கரையில் காத்திருந்து அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நாங்களும் கடலில் ஏற்பட்டுள்ள கடும் சீற்றம் காரணமாகக் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளோம்.

அரசாங்கமும் கடற்படையும் உடனடியாகத் தலையிட்டு எமக்குப் பதில் வழங்க வேண்டும். இவ்வளவு நேரமாகியும் காணாமல் போன கடற்றொழிலாளர்கள் தொடர்பில் எந்தவொரு தகவலும் கிடைக்காததால் பெரும் கவலையடைந்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
கடற்றொழிலுக்குச் சென்ற மூன்று கடற்றொழிலாளர்களும் இதுவரை கரை திரும்பாத சம்பவம் மாத்தளன் பகுதியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்களை விரைவாகக் கண்டறிய உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்களும் கடற்றொழிலாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.





தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri