திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் (Photos)
உணவு பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் - புதிய நாடு” தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் விவசாயம், மீன்பிடி மற்றும் உணவு உற்பத்திகள், பாடசாலைகள் மட்டத்தில் முன்னெடுக்கப்படும் சத்துணவு திட்டங்கள் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் எதிர்வரும் காலத்தில் விவசாயத் துறையினை மேம்படுத்துவது குறித்தும் அதற்காக தற்போது விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் அவற்றினை சீர்செய்வதற்கு தேவையான வழிவகைகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
மாவட்ட மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் தீர்வு

மாவட்ட மட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து பிரதமரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து அது தொடர்பிலான மேல்மட்டக் கலந்துரையாடல்கள் மூலமாக வெகுவிரைவில் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.
நிகழ்வின் இறுதியில் விவசாயத்துறை சார்ந்து பாதிப்பிற்குள்ளாகிய மற்றும் யானைகளது தாக்குதல்கள் காரணமாக உயிர் நீத்தவர்களது குடும்பங்களுக்கான உதவித்தொகைகளும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான கபில நுவன் அதுகோரள, ஏ.எல்.எம் அதாவுள்லா, ஜனக வக்கும்புற, எம்.எஸ் தௌபீக், யதமினி குணவர்தன, மற்றும் பல அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






