கிழக்கில் நடப்பு மாதத்தில் 2500 புதிய கோவிட் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்: ஏ.ஆர்.எம்.தௌபீக்
கிழக்கில் இனங்காணப்படும் கோவிட் நோயாளிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஓமிக்ரோன் தொற்று இருக்கலாம் எனவும், நடப்பு மாதத்தில் 2500புதிய கோவிட் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், மேலும் 25 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார்.
தொற்றுக்குள்ளானவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 40 கர்ப்பிணி தாய்மார்கள் புதிய கோவிட் நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
கோவிட் தடுப்பு மருந்து ஏற்றும் பணிக்கு ஓர் ஆண்டு நிறைவை ஒட்டி திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம். தௌபீக் தலைமையில் சமய அனுஷ்டானங்களுடன் ஓராண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 29ஆம் திகதி நாட்டில் முதலாவது கோவிட் தடுப்பூசி செலுத்தி கோவிட் தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக அரச தலைவர்களுடன் இணைந்து அயராது உழைத்த முப்படையினர், சுகாதார திணைக்கள அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இன்றையதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் கீழ் நாடு பூராகவும் ஓராண்டு நிறைவு நாள் கொண்டாடப்படுகிறது.
கோவிட் தடுப்பூசி செலுத்தியதில் இலங்கை உலக நாடுகளின் தரப்படுத்தலில் முதல் ஆறு நாடுகளுள் இடம்பிடித்துள்ளதுடன், இக் கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்காக 25 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
எனவே நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோவிட் தொற்றினை முற்றாகக் கட்டுப்படுத்துவதற்கு நாட்டின் குடிமக்கள் என்ற வகையில் அனைவரும் கோவிட் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் உண்மைக்குப் புறம்பான கோவிட் தடுப்பூசி தொடர்பில் போலியான செய்திகள் பரப்பப்பட்டு வருவதைத் தவிர்த்து மூன்றாவது தடுப்பூசி ஆக பைசர் தடுப்பூசியினை தவறாது பெற்றுக் கொள்ளவேண்டும்.
நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பரிசோதனைகளில் பெரும்பாலானவர்களுக்கு ஓமிக்ரோன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டு வரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறும் தொடர்ச்சியாக முகக்கவசங்களை அணிந்து சமூக இடைவெளிகளைப் பேணி நாட்டிலிருந்து முற்று முழுதாக கோவிட் தொற்றினை இல்லாதொழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராகத் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர்
கபில நுவான் அத்துகோரல, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்
எ.எச்.அன்சார், மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்,
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.ஜி.எம் கொஸ்தா, பிரதி
சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ. பிரேமானந்த் மற்றும் ஏனைய
அமைச்சுக்களின் செயலாளர்கள் சுகாதார பணிமனையின் அதிகாரிகள், ஊழியர்கள் எனப்
பலரும் கலந்து கொண்டனர்.



