இலங்கை தென்கடலில் சிக்கிய 370 கோடி பெறுமதியான போதைப்பொருட்கள்
இலங்கையின் தென்கடலில் நேற்று கைப்பற்றப்பட்ட படகில் இருந்து 179 கிலோ 906 கிராம் ஐஸ் என்ற (Crystal Methamphetamine) மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் உட்பட்ட போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப்போதைப்பொருட்களின் சந்தைப்பெறுமதி 3,798 மில்லியன் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது முன்னதாக ஆறு பேருடன் பயணித்த உள்ளூர் பல நாள் கடற்றொழில் இழுவை படகு ஒன்றை கடற்படையினர் இடைமறித்தனர்.
இதனையடுத்து நான்கு பேருடன் மற்றொரு உள்ளூர் கடற்றொழில் இழுவை படகு கைப்பற்றப்பட்டது. இது நடுக்கடலில் போதைப்பொருள் பரிமாற்றத்திற்காக காத்திருந்த படகாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கை கடலோர காவல்படை கப்பலான சமுத்திரரக்ஸா இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கை வகித்தது.
இதனையடுத்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் காலி துறைமுகத்துக்கு எடுத்து வரப்பட்டநிலையில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா காலி துறைமுகத்தில் அதனை பார்வையிட்டார்.
இந்தநிலையில் படகுகளில் பயணித்தவர்கள் வெலிகம, இமதுவ மற்றும் காலி போன்ற பிரதேசங்களில் வசிக்கும்; 23 வயது முதல் 54 வயதுக்குட்பட்டவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, 2024ஆம் ஆண்டில் இதுவரைக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை மதிப்பு 9,300 மில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |