22ம் திருத்தம் மீதான விவாதம் ஒத்திவைக்கப்படலாம் - வெளியாகியுள்ள தகவல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் நோக்கில் இலங்கையின் அரசியலமைப்பின் 22வது திருத்தம் தொடர்பான பிரதான சட்டமூலத்தின் மீதான விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக விவாதம் ஒத்திவைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 6 மற்றும் 7ம் திகதிகளில் விவாதம் நடத்த திட்டமிடப்பட்டது.
ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள்
22வது திருத்தச் சட்ட வரைவு அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வர்த்தமானியாக வெளியிடப்பட்டது. நாட்டில் நிலவி வரும் பொருளாதார சீர்குலைவு காரணமாக அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த திருத்தம் உருவாக்கப்பட்டது.
இதன் மூலம் 19வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ததன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கிய 20ம் திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த சட்டமூலத்தின் மீதான விவாதம் தற்போது நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றக் குழுவுடன் கூட்டத்திற்கு அவர் அழைப்பு
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றக் குழுவில் நேற்று கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொருளாதார நெருக்கடி மற்றும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, இந்த விடயத்தை நகர்த்துவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று பெரும்பாலானவர்கள் கருதுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசியல் அமைப்பின் திருத்தத்தின் சில விதிகள் குறித்து 3 அல்லது 4 நபர்களால் கருத்து வேறுபாடுகள் தெரிவிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றக் குழுவுடன் புதன்கிழமை மீண்டும் கூட்டத்திற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.